×

மணிப்பூரில் பழங்குடியினர் வசிக்கும் மலைப் பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் மேலும் 6 மாதத்திற்கு நீட்டிப்பு: ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

இம்பால்: மணிப்பூரில் கடந்த ஜூலையில் மாயமான 2 மாணவர்கள் கடத்தி கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படம் வெளியானதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் மாணவர்கள், பெண்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இம்பால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் மற்றும் குக்கி பெண்கள் அமைப்பினர் நேற்று 2வது நாளாக போராட்டம் நடத்தினர். இதே போல, இம்பாலின் மொய்ரங்கோம் பகுதியில் மாணவர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் போது, 200 மீட்டர் தொலைவில் உள்ள முதல்வர் பைரன் சிங் வீட்டை நோக்கி ஊர்வலம் சென்றனர். அப்போது அதிரடிப் படை வீரர்கள் மீது மாணவர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் மாணவர்களை விரட்டினர்.

2வது நாளாக மாணவர்கள் போராட்டம் வன்முறையில் முடிந்ததால், அடுத்த 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சிஆர்பிஎப், அதிரடிப் படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, 2 மாணவர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிஐ இயக்குநர் அஜய் பத்நாகர் தலைமையிலான குழு நேற்று இம்பால் வந்தடைந்தது. இந்த நிலையில், மணிப்பூரில் குழப்பமான பகுதிகளில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் மேலும் 6 மாதத்திற்கு ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிக்கப்படுவதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. இந்த சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ள பகுதிகள் அனைத்துமே குக்கி இன மக்கள் வசிக்கும் மலைப்பகுதிகள்.

அதே சமயம் மெய்டீஸ் மக்கள் வசிக்கக் கூடிய 19 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் பாதுகாப்பு ராணுவ வீரர் பொதுமக்கள் யாரையாவது தவறுதலாகவோ தவிர்க்க முடியாமலோ சுட்டுக் கொன்றாலும், இந்தச் சட்டம் அவரைப் பாதுகாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பு அதிகாரம் இல்லாத இடங்களில் மாநில போலீசார் அனுமதியின்றி ராணுவமும், அசாம் ரைபிள் பாதுகாப்பு படையினரும் நுழைய முடியாது.

இயல்பு நிலையை மீட்பதற்கு முயற்சி
அமெரிக்கா சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நியூயார்க்கில் வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சிலில், மணிப்பூர் விவகாரம் குறித்த கேள்விக்கு அளித்த பதிலில், ‘‘மணிப்பூரில் உள்ள பிரச்னையின் ஒரு பகுதிக்கு புலம்பெயர்ந்தவர்கள் காரணம். ஆனால் இதற்கு முன்பும் பல நாட்கள் மணிப்பூரில் பதற்றமான சூழல் இருந்துள்ளது. அங்கு இயல்புநிலையை மீட்கவும், சட்டம் ஒழுங்கை அமல்படுத்தவும் ஒன்றிய, மாநில அரசுகள் முயற்சித்து வருகின்றன’’ என்றார்.

The post மணிப்பூரில் பழங்குடியினர் வசிக்கும் மலைப் பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் மேலும் 6 மாதத்திற்கு நீட்டிப்பு: ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Manipur ,Union Home Ministry ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...